கடலூர்: பண்ருட்டி அருகே கீழக்கொல்லை காமன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் அஸ்வத் (4). இச்சிறுவன் கடந்த 20222ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியில் திடீரென மாயமானான். இது குறித்து செந்தில் நாதன் முத்தாண்டிக்குப்பம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுவன் வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.
இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த முருகவேல் வீட்டுக்கும், செந்தில் நாதன் வீட்டுக்கும் இடையே இடப் பிரச்சனை இருந்ததும், இதன் காரணமாக முருகவேல் மகள் ரஞ்சிதா (26), அஸ்வத்தை முந்திரி காட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. போலீஸார் ரஞ்சிதாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி ஷோபனா தேவி தீர்ப்பு கூறினார். அதில் ரஞ்சிதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார்.