சிவகங்கை: ஒட்டக்குளம் கண்மாய் பகுதியில் ‘யூ டியூப்’ பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே ஒட்டக்குளம் கண்மாய் பகுதியில் வாளுடன் ஒருவர் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. சிவகங்கை தாலுகா சார்பு-ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து வாளும், 4 நாட்டு வெடிகுண்டு களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர் சிவகங்கை அருகே கீழக்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது. இவர், ஏற்கெனவே மற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் கீழக்குளத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (26), ரமேஷ் குமார் என்ற கர்லா ரமேஷ் (24), பி.வேலாங்குளத்தைச் சேர்ந்த சூர்யா (27) ஆகியோருடன் சேர்ந்து ‘யூ டியூப்’ பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்தது.