தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ஏலக்காய், அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல் - மூவர் கைது


ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 402 கிலோ ஏலக்காய், 3,781 ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் 51 அழகுசாதனப் பாக்கெட்டுகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து 3 பேரை படகுடன் நடுக்கடலில் கைது செய்தனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு உணவுப் பொருள் உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக அந்நாட்டு கடற்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமன்னார் அருகே அந்நாட்டு கடற்படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழக கடற்பரப்பிலிருந்து இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த ஒரு பைபர் படகை நடுக்கடலில் கடற்படையினர் சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்டனர். படகில் 14 சாக்குகளில் 402 கிலோ ஏலக்காய், 3,781 ஷாம்பு பாக்கெட்டுகள் , 51 அழகு சாதனப் பொருட்கள் இருந்தன.

பின்னர் படகிலிருந்த 3 பேரையும் கடற்படையினர் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கடத்தல் பொருட்கள் தமிழகத்தில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும், 3 பேரிடமிருந்து தமிழகத்தில் இருந்து பொருட்களை அனுப்பிய நபர்களின் செல்போன் மற்றும் விவரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதை கொண்டு தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

x