மதுரை: மதுரை புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து திருடி வந்த ‘மங்கி குல்லா’ திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகேயுள்ள ராம் நகரில் 100-க்கும் மேற்பட்ட தனித்தனி வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், கடந்த நவம்பர் 5-ம் தேதி நள்ளிரவில் முகமூடி திருடர்கள் 2 பேர் ஆயுதங்களுடன் வீடுகளை நோட்டமிட்டு, ஒரு வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர். மற்றொரு வீட்டின் கதவை உடைக்க முயன்றபோது, வீட்டுக்குள் இருந்தவர்கள் ரகசிய கேமரா மூலம் பார்த்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, போலீஸார் வருவதை அறிந்த அந்த திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் போலீஸார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக ‘மங்கி குல்லா’ அணிந்து வலம் வந்த திருடர்கள் என்பது தெரியவந்தது.
இவர்கள், மதுரை புறநகரான நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஈரோடு பனையம்பள்ளி சிவா (39), அவரது நண்பர் சிவகங்கை மில் கேட் மருதுபாண்டி (35) எனத் தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்த போது, இவர்கள் இருவரும் நட்பாகி திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை கைது செய்த மதுரை போலீஸாரையும், உதவியாக இருந்த ஈரோடு போலீஸாரையும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பாராட்டினர்.