நாகையில் ரூ.1 கோடி மதிப்பிலான 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


நாகை: வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 600 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நாகையில் இருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாகை சால்ட்ரோட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த ஒரு வீட்டில் போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டுக்குள் பல பெட்டிகளில் கடல் அட்டைகள் ஊற வைக்கப்பட்டு இருந்ததும், தரையில் உலர வைக்கப்பட்டு கிடந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, 12 பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 600 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழு போலீஸார் பறிமுதல் செய்து, வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, போலீஸார் வருவதை அறிந்து தப்பியோடிய கடல் அட்டை வியாபாரி மற்றும் தொழிலாளர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x