சிவகங்கை: வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வாள், கடப்பாறை, முகமூடி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை அருகே சித்தலூர் விலக்கு பகுதியில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அப்பகுதிக்குச் சென்று சிவகங்கை தாலுகா ஆய்வாளர் கணேச மூர்த்தி தலைமையிலான போலீஸார் சோதனை யிட்டனர்.
அங்கு பதுங்கியிருந்தது திருப்புனம் அருகே மேலராங்கியத்தைச் சேர்ந்த வேல்முருகன் (35), பெரியகோட்டையைச் சேர்ந்த ராமையாராஜன் (37), சிவகங்கையைச் சேர்ந்த பாண்டி (36), கருப்புச்சாமி (42), வானக்கருப்பைச் சேர்ந்த நாடிமுத்து (41) என்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் சிவகங்கை பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து வாள், அரிவாள், கடப்பாறை, முகமூடி, கையுறை, மிளகாய் பொடி பாக்கெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.