காரைக்குடியில் இளைஞர் கொலை சம்பவ வீடியோவை வெளியிட்டதாக 2 பேர் கைது


சிவகங்கை: காரைக்குடி காவல் நிலையம் அருகே இளைஞர் கொலை சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட்டது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி சேர்வார் ஊருணியை சேர்ந்த மனோஜ் (23) கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மனோஜ், மார்ச் 21ம் தேதி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக காரைக்குடி வடக்கு போலீஸார் 6 பேர் மீது வழக்குப் பதிந்து மூவரை கைது செய்தனர். இக்கொலை தொடர்பான காட்சிகள் வெளியாகாமல் இருக்க சம்பவ இடத்தில் இருந்த கடைகளின் சிசிடிவி கேமரா ‘ஹார்ட் டிஸ்க்’ குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதேபோல், அச்சம்பவத்தை வீடியோ எடுத்தவர்களின் செல்போன்களை வாங்கி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை அழித்தனர்.

எனினும் நேற்று முன்தினம் தனியார் காலணி கடையிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகின. அதை சில தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதையடுத்து, போலீஸார் அந்த கடையிலிருந்த சிசிடிவி கேமரா ‘ஹார்ட் டிஸ்க்’-கை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், அந்த கடை மேலாளர் ஜாபர் சித்திக், தனது அனுமதியின்றி சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட கடை ஊழியர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த ருபேஷ் (20), மன்னார்குடியைச் சேர்ந்த ஆதவன் (21) ஆகிய இருவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

x