திமுக பிரமுகர் வி.கே.குருசாமியின் சகோதரி மகன் மதுரையில் நேற்று நள்ளிரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர்கள் வி.கே.குருசாமி- ராஜபாண்டி. திமுக, அதிமுக பிரமுகர்களான இருவரும் உறவினர்கள். இவர்கள் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களாகவும் இருந்தனர். இந்நிலையில், இவர்களிடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. தொடர்ந்து, ராஜபாண்டியின் உதவியாளராக இருந்த அவரது அண்ணன் மகன் சின்னமுனீஸ் 2003-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வி.கே.குருசாமி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த பாம்பு பாண்டி, மாரிமுத்து உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 2008-ல் சின்னமுனீஸ் கொலைக்குப் பழிக்குப் பழியாக வழுக்கை முனீஸ் என்பவரை, ராஜபாண்டி தரப்பு கொலை செய்தது.
பின்னர், சின்ன முனீஸ் தம்பி வெள்ளைக்காளி, குருசாமியின் உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தி ஆகியோரைக் கொலை செய்தார். 2013-ல் சின்னமுனீஸ் கொலை வழக்கில் தொடர்புடைய குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியை வெள்ளக்காளி, அவரது கூட்டாளிகள் சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி ஆகியோர் கொலை செய்தனர். இதில் ஆத்திரமடைந்த குருசாமி தரப்பு சகுனி கார்த்தியின் தாய்மாமன் மயில் முருகனை 2013-ல் மதுரை முனிச்சாலை அருகே கொலை செய்தது. மயில்முருகன் கொலைக்கு பழிக்குப்பழியாக 2015-ல் குருசாமியின் மகன் மணியின் நண்பர் முனியசாமி கொலை செய்யப்பட்டார்.
2016-ல் வெள்ளக்காளி தரப்பினர் கமுதியில் வி.கே.குருசாமியின் மகளின் கணவர் பாண்டியனின் தம்பி காட்டுராஜாவை பேருந்தில் கொலை செய்தனர். 2017-ல் தொப்பிலி் முனுசாமியை கமுதிக்கு காரில் கடத்திய குருசாமி தரப்பு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது.
இதன் தொடர்ச்சியாக, மதுரை சிக்கந்தர் சாவடியில் பதுங்கியிருந்த வெள்ளக்காளியின் கூட்டாளிகள் சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர் போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர். இதற்கு குருசாமிதான் காரணம் என வெள்ளக்காளி தரப்பினர் கருதினர். 2019-ல் தேர்தல் பணியில் இருந்த குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டியனை, வெள்ளக்காளி தரப்பு வெட்டிக் கொலை செய்தது. 2020 ஜூலை 28-ல் குருசாமியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இவ்வாறு இரு தரப்பிலும் பழிக்குப் பழியாக 20-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2023-ல் மதுரையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சென்ற வி.கே. குருசாமியை பெங்களூருவிவில் வெள்ளக்காளி தரப்பு சரமாரி வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர், தற்போது வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், வி.கே.குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் என்ற கிளாமர் கார்த்திக்(32) மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீஸார் அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல அனுப்பானடியைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு மாதமாக தனக்கன்குளம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலைவையில் உள்ளன. சிறையில் உள்ள வெள்ளக்காளி தரப்பினர் திட்டமிட்டு இக்கொலையை செய்திருக்கலாம் இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது. கொலையான காளீஸ்வரனுக்கு மனைவி மீனாட்சி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை கீரைத்துறை, காமராஜர்புரம் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புமணி கண்டனம்: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், திமுக பிரமுகரின் உறவினரே கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. காளீஸ்வரனுக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும்கூட, சிறையில் தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது. இனியாவது சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்