நெல்லை: மர்ம நபர்களால் நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். அடுத்த டார்கெட் நான் தானா என எண்ண தோன்றுகிறது நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் எஸ்.ஐ ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி வீடியோ வெளியிட்டுள்ளார்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய, ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி(60), நெல்லை பிஜிலி டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். ரம்ஜான் நோன்பை முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதி அதிகாலை அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பல் ஜாகிர் உசேனை வெட்டிக்கொலை செய்தது. இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த தெளபிக்கை போலீசார் ரெட்டியார்பட்டி பகுதியில் வைத்து சுட்டுப் பிடித்தனர்.
இதற்கிடையே ஜாகிர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதாக ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை டவுன் சரக காவல் உதவி ஆணையர் செந்தில் குமார், கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி பரிந்துரை செய்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், "மர்ம நபர்களால் நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். இன்று ஹெல்மெட் அணிந்து வந்த நபர் எங்களது வீட்டை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த டார்கெட் நான் தானா என எண்ண தோன்றுகிறது. சாவை நினைத்து நாங்கள் பயப்படவில்லை, அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம்.
உடலை வாங்க மாட்டோம் என நிபந்தனை விதித்ததாலேயே முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார்கள். உதவி ஆணையாளர் செந்தில்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கலில் பணிபுரியும் போது இது போன்று ஒரு நபர் மீது பிசிஆர் வழக்கு தொடர்ந்து அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே வேலையை அவர் செய்து வருகிறார். காவல்துறையில் ஒரு சில அதிகாரிகள் இன்றும் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதனால் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
இந்த சூழலில் ஜாகிர் உசேன் கொலையில் 16 வயது சிறுவன் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. அதாவது ஜாகிர் உசேன் தொழுகை முடித்து எந்த வழியாக தினமும் செல்வார் என்பது குறித்து நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுவனிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்புப் படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார் என்பது உறுதியானது. இதையடுத்து அவரையும் இந்த வழக்கில் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
ஜாகிர் உசேன் மகன் வீடியோ வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, ஜாகிர் உசேனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.