காட்பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: உணவக உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை திருட்டு!


வேலூர்: காட்பாடி மெட்டுக்குளத்தில் பட்டப்பகலில் உணவு கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 47 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், அதேபகுதியில் உணவு கடை நடத்தி வருகிறார். இவர், தனது இரண்டாவது மககளின் திருமணத்துக்காக நேற்று முன்தினம் அதிகாலை குடும்பத்தினருடன் சென்றார்.

அன்றிரவு வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டை காஸ் கட்டர் மூலம் துண்டாக்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

அதில் மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 47 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்தார். அதன்பேரில், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரித்தனர்.

மேலும், திருட்டு நடைபெற்ற இடத்தில் தடயஅறிவியல் நிபுணர்கள் மர்ம நபர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

x