தஞ்சாவூா்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள காசாங்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த வி.பிரகாஷ்(40). கூலித் தொழிலாளியான இவர், மார்ச் 13-ம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அதை போலீஸாருக்கு தெரிவிக்காமல், மார்ச் 14-ம் தேதி பிரகாஷ் உடலை அவரது மனைவி நாகலட்சுமி(35) வற்புறுத்தலின்பேரில், உறவினர்கள் எரித்து விட்டனர்.
இந்நிலையில், இறந்துபோன பிரகாஷின் மனைவி நாகலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வீரக்குமார்(25) என்பவருக்கும் கூடா நட்பு இருந்துள்ளதும், இதனால், பிரகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நாகலட்சுமியை நேற்று போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நாகலட்சுமி தன்னுடம் கூடா நட்பில் இருந்த வீரக்குமாருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை பிரகாஷ் பார்த்து விட்டதால், அவரை நாகலட்சுமியும், வீரக்குமாரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் தூக்கில் தொங்கவிட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதையடுத்து, நாகலட்சுமியை மதுக்கூர் போலீஸார் கைது செய்தனர். மேலும், வீரக்குமாரை கைது செய்ய போலீஸார் தென்காசிக்கு சென்றுள்ளனர்.