மதுரையில் ரூ.5 லட்சம் கடனுக்காக வழக்கறிஞர் கடத்தல்: உறவினர் உட்பட 3 பேர் கைது


மதுரை: ரூ.5 லட்சம் கடனுக்காக மதுரையில் வழக்கறிஞரை கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீர ராஜ்குமார். இவரின் நெருங்கிய உறவினரான, கமுதியை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்வேல் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொடுக்கவில்லையாகம்.

இந்நிலையில் மார்ச் 20-ம் தேதி காரில் மதுரை வந்த செந்தில்வேலை, ராஜ்குமார் தனது நண்பர்கள் மூலம் கண்காணித்து பின்தொடர்ந்தார். தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே செந்தில்வேலின் காரை மடக்கி ராஜ்குமார் அதில் ஏறினார்.

காந்தி அருங்காட்சியகம் அருகே கார் சென்றபோது, ராஜ்குமார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, காரை நிறுத்தினார். இதைப் பயன்படுத்தி செந்தில்வேல் காரில் இருந்து தப்ப முயன்றார். ஆனால், பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்த ராஜ்குமாரின் நண்பர்கள் செந்தில்வேலை தாக்கி, அதே காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆயுதப்படை காவலர் விக்னேஷ் சந்தேகத்தின் பேரில், காரைப் பின் தொடர்ந்து செல்போனில் வீடியோ எடுத்தார். ராஜா முத்தையா மன்றம் சந்திப்பை கார் கடந்து வேகமாகச் சென்றதால் காவலர் விக்னேஷ் பின் தொடர முடியவில்லை. காரின் பதிவெண்ணை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொடுத்து, கடத்தல் சம்பவம் பற்றி தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். ராஜா முத்தையா மன்றம் பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். பதிவு எண்ணைக்கொண்டு விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கார் நிற்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று ராஜ்குமார் (31), அவரது நண்பர்கள் மதுரை மாரிமுத்து (23), ஸ்ரீகாந்த் (19) ஆகியோரைப் பிடித்து, வழக்கறிஞர் செந்தில்வேல், அவரது ஓட்டுநர் லட்சுமணனை மீட்டனர். விசாரணையில், பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததால், வழக்கறிஞரைக் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரை தல்லாகுளம் போலீஸார் கைது செய்தனர்.

x