கோவை: கோவையில் தனியார் கல்லூரியில் படித்துவரும் ஒரு மாணவியை சூர்யா(22) என்பவர் காதலித்துள்ளார். ஆனால் மாணவி இதை ஏற்கவில்லை. கடந்த 14-ந் தேதி மாணவி, கல்லூரி அருகே நின்றிருந்தபோது, சூர்யா அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மாணவி, தனது தம்பிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் தனது நண்பர் தருண் உள்ளிட்டோருடன் வந்து சூர்யாவை கண்டித்துள்ளார். இதையடுத்து சூர்யா அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், மாணவியின் தம்பி, கல்லூரி செல்வதற்காக போத்தனூரில் நேற்று முன்தினம் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு தனது நண்பர்களுடன் காரில் வந்த சூர்யா, மாணவியின் சகோதரரை கடத்திச்சென்றார். தொடர்ந்து மாணவியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக மாணவி, போத்தனூர் போலீஸில் புகார் அளித்தார். இதற்கிடையில், சூர்யாவை கும்பல் விடுவித்தது போலீஸார் விசாரித்ததி்ல், சூர்யா தனது நண்பர்களான வெள்ளலூரை சேர்ந்த கலையரசன்(19), சிங்காநல்லூர் சங்கர்(21), திருமுருகன் (21) ஆகியோருடன் சேர்ந்து மாணவியின் சகோதரரை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கலையரசன், சங்கர், திருமுருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சூர்யாவை தேடி வருகின்றனர்.