கோவை: கேரளாவுக்கு ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.71.50 லட்சம் ஹவாலா பணத்தை வாளையாறு சோதனைச் சாவடி அருகே போலீஸார் கைப்பற்றினர்.
ஆந்திராவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு உயர் ரக போதைப்பொருள் கடத்தப்படுவதாக, கேரள மாநிலம் பாலக்காடு கலால்துறை சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர்கள், வாளையாறு சோதனைச் சாவடியில் வாகனங்களை தீவிர சோதனை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு ஒரு ஆம்னி பேருந்து வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். பேருந்தில் இருந்த ஒரு பையை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. போலீசார் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து எண்ணியபோது மொத்தம் ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது.
ஆனால், அந்த பணத்தை கொண்டு சென்றது யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீஸார் பணத்தை கைப்பற்றினர். அவை ஹவாலா பணம் என்பதும், கொச்சிக்கு கடத்திச் செல்லப்பட்டதும், கடத்திச்சென்றவர் கொச்சி விமான நிலையத்தில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
உடனடியாக விமான நிலையம் சென்ற போலீஸார் ஹவாலா பணத்தை கடத்திய ஆந்திர மாநிலம் கர்னோல் காவடியை சேர்ந்த சிவபிரசாத்(59) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.