சென்னை: தமிழக அரசு, மாநிலத்தில் ஆங்காங்கே தொடர்ந்து கொலைகள் நடைபெறுவதை தடுக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி கொலை நடைபெறாமல் இருக்க 24 மணி நேர தொடர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து கொலைகள் நடைபெறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வாயிலாக பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
இளம் வயதினர், நடுத்தர வயதினர், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பட்ட மக்களும் கொலை செய்யப்பட்டதும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் அதிர்ச்சிக்குரியது.
காரைக்குடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் கஞ்சா வியாபாரி, திருத்தணி அருகே 19 வயது இளைஞர், திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, ஈரோடு நசியனூரில் குற்ற வழக்கில் தொடர்புடையவர், கோயம்புத்தூரில் பெண் ஆசிரியை, சென்னையில் தி.மு.க நிர்வாகி ஆகியோர் கடந்த சில தினங்களில் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது.
நகை, பணம், பாலியல் தொடர்பு, போதைப்பொருள், முன்விரோதம், பழிக்குப்பழி போன்றவற்றிற்காக கொலை செய்யப்படுவது கடந்த 4 ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு காரணம் காவல்துறையின் மீதும், சட்டத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயமே இல்லாதது தான். அந்த அளவில் சட்டம் ஒழுங்கும், காவல்துறையினரின் பணியும் அமைந்துள்ளது.
தமிழக அரசு கொலை நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என கூறுவதால் என்ன பயன். மாறாக நாளுக்கு நாள் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. தமிழக அரசின் கவனமின்மையும், மெத்தனப்போக்கும் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம். சட்டம் ஒழுங்கில் லஞ்சத்திற்கும், முறைகேட்டிற்கும் இடம் இருக்கக்கூடாது.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி, காவல் துறையினரின் பணியை முறைப்படுத்தி, போதைப்பொருட்களை ஒழித்து, மாணவர்கள், இளம் சமுதாயத்தினர், மகளிர், முதியோர் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்