பல்லடம்: பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (38). இவர், அரசுப் பணி ஒப்பந்ததாரர். இவர், ஒப்பந்த உரிமத்தைப் புதுப்பிக்க சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு, கே.அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அந்த சான்றிதழில் கையெழுத்திட்டு, மேல்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென கிராம நிர்வாக அலுவலர் ரேவதி கேட்டார். இதனை கொடுக்க விரும்பாத கதிர்வேல், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கதிர்வேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனர்.
அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த விஏஓ ரேவதியிடம், கதிர்வேல் கொடுத்தார். அதை ரேவதி வாங்கியபோது மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார், ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீஸார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.