மதுரை: மதுரையில் ரூ.5 லட்சம் கடனுக்காக கத்தி முனையில் வழக்கறிஞரை காரில் கடத்திய கும்பலை போலீஸார் சினிமா பாணியில் துரத்தி கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீர ராஜ்குமார். கமுதியை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்வேல். இருவரும் உறவினர்கள். செந்தில்வேல் ராஜ்குமாரிடம் ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செந்தில்வேலை கடத்தி பணம் பெற ராஜ்குமார் திட்டமிட்டுள்ளார். இதன்படி, 2 நாட்களுக்கு முன்பு காரில் செந்தில்வேல் மதுரை வந்துள்ளார். ராஜ்குமார் தனது நண்பர்கள் மூலம் செந்தில்வேலை கண்காணித்து பின்தொடர்ந்தார். தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே செந்தில்வேலின் காரை மடக்கி ராஜ்குமார் காரில் ஏறியுள்ளார். காந்திமியூசியம் அருகே கார் சென்றபோது, ராஜ்குமார் ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி காரை நிறுத்தினார்.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செந்தில்வேல் காரில் இருந்து தப்ப முயன்றார். அப்போது காருக்கு பின்னால் டூவீலர்களில் வந்த ராஜ்குமாரின் நண்பர்கள் செந்தில்வேலை தாக்கி காரில் மீண்டும் ஏற்றி கடத்தினர். இந்த நேரத்தில் அவ்வழியாக டூவீலரில் சென்ற மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் விக்னேஷ் சந்தேகித்தின்பேரில் சம்பந்தப்பட்ட காரை பின் தொடர்ந்தார். தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
அக்கார் ராஜா முத்தையா மன்றம் சந்திப்பை கடந்து வலது புறமாக வேகமாக சென்றதால் காவலர் விக்னேஷ் தொடர்ந்து போக முடியவில்லை. இருப்பினும், காரின் பதிவெண்ணை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொடுத்து கடத்தல் சம்பவம் பற்றிய விவரத்தை தெரிவித்தார்.
வாக்கி டாக்கி மூலம் ரோந்து பணியிலுள்ள போலீஸாரை உஷார்படுத்தினர். தொடர்ந்து போலீஸார் ராஜா முத்தையா மன்ற பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். காரை பின் தொடர்ந்த டூவீலர் பதிவெண் மூலம் வழக்கறிஞரை கடத்திய கார் தல்லாகுளம் பகுதி கவுதம் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. அக்கார் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகிலுள்ள இருப்பது தெரிந்து தனிப்படை போலீஸார் விரைந்தனர்.
அங்கு ராஜ்குமார் (31), அவரது நண்பர்கள் மதுரை மாரிமுத்து (23), ஸ்ரீகாந்த் (19) ஆகியோரை மடக்கி பிடித்தனர். வழக்கறிஞர் செந்தில்வேல், அவரது கார் ஓட்டுநர் லட்சுமணன் மற்றும் காரை மீட்டனர். விசாரணையில், கொடுத்த பணத்தை வாங்க வழக்கறிஞரை கடத்திய ராஜ்குமார் அவரது சொந்த பெரியம்மா மகன் என்பதும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க மறுத்ததால் காரில் கடத்தியதாகவும் தெரிந்தது.ராஜ்குமார் உட்பட 3 பேரை தல்லாகுளம் போலீஸார் கைது செய்தனர். கடத்தல் சம்பவத்தில் துரிதமாக செயலாற்றி வழக்கறிஞரை மீட்டு காவல்துறையினரை காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வெகுவாக பாராட்டினார்.