பெண்ணிடம் போலீஸ் என மிரட்டி தங்க நகைகள் பறிப்பு: சென்னையில் துணிகர சம்பவம்


சென்னை: பழவந்தாங்கல் பகுதியில் பெண்ணிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டி தங்க வளையலை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார். 1 சவரன் எடை கொண்ட தங்க வளையல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியான அறிக்கையில், ‘சென்னை, நங்கநல்லூர், நேரு மெயின் ரோட்டில் வசிக்கும் திரிபுரசுந்தரி (42) என்பவர் கடந்த 11.03.2025 அன்று மாலை, கார் ஓட்டி பழகுவதற்காக வாடகை ஓட்டுநருடன் அவரது காரில் வேளச்சேரி சென்று கார் ஓட்டுவது குறித்து ஓட்டுநருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தான் போலீஸ் என்றும் இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் மிரட்டியுள்ளார்.

மேலும், அங்கிருந்த வாடகை ஓட்டுநரை அனுப்பி வைத்து, மேற்படி பெண்ணை மிரட்டி கார் ஓட்டி காட்டும்படி கூறி திரிபுரசுந்தரி காரை ஓட்டிச் செல்ல அந்த நபர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, நங்கநல்லூர் 3வது மெயின் ரோடு அருகே செல்லும்போது, அந்த நபர் காரை நிறுத்தச் சொல்லி திரிபுரசுந்தரியை மிரட்டி அவர் அணிந்திருந்த 1 சவரன் தங்க வளையலை பறித்துக் கொண்டு அவரது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இது குறித்து திரிபுரசுந்தரி பழவந்தாங்கல் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பழவந்தாங்கல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, போலீஸ் எனக்கூறி தங்க வளையலை பறித்துச் சென்ற நுங்கம்பாக்கம், தெய்வநாயகம் தெரு, முத்துப்பாண்டியன் மகன் கனகராஜ் (48) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 1 சவரன் தங்க வளையல் மீட்கப்பட்டு, 1 கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி கனகராஜ் விசாரணைக்குப் பின்னர் நேற்று (20.03.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x