மதுரை: மதுரையில் பயணித்த அரசு நகர் பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம், கழுகர்கடை பகுதியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மகளிருக்கான அரசு நகர பேருந்து இன்று காலை சென்றது. இப்பேருந்து தெப்பக்குளம் நிறுத்ததில் நின்றபோது, மூதாட்டி ஒருவர் அந்த பேருந்தில் ஏறினார். கீழவாசல் பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கினார். சில வினாடியில் மூதாட்டி பேருந்தின் முன்பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
இவரை கவனிக்காமல் அலட்சியமாக பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் கணேசன் மூதாட்டி மீது மோதினார். முன்பக்க சக்கரத்தில் சிக்கிய மூதாட்டி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீஸார் மூதாட்டியின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் மதுரை மாவட்டம், சக்குடியைச் சேர்ந்த பாண்டியம்மாள் (65) என தெரியவந்தது. இவ்விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.