போலி ஆவணங்கள் மூலம் மோசடி: ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு சங்க தனி அலுவலர், மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை


விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு இயந்திரம் வாங்கியதாக, போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2.40 லட்சம் கையாடல் செய்த வழக்கில் தனி அலுவலர், மேலாளர் உட்பட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசை தொழில் சங்கத்துக்கு, மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கடலை உடைப்பு இயந்திரம் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், கூட்டுறவு சங்க தனி அலுவலர் சுப்பிரமணியன், மேலாளர் சிவப்பிரகாசம், விருதுநகர் மாவட்ட கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ரெங்கன், லேத் ஒர்க்ஸ் உரிமையாளர் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையின் போது, உதவி இயக்குநர் ரெங்கன் உயிரிழந்துவிட்டார். இதில் சுப்பிரமணியன், சிவபிரகாசம் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.35 ஆயிரம் அபராதமும், குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வீரணன் தீர்ப்பளித்தார்.

x