திருத்தணி அருகே இளைஞர் கொடூரக்கொலை; கிராமத்துக்கு செல்லும் பாதையில் உடல் வீச்சு


திருத்தணி: திருவாலங்காடு அருகே மர்ம கும்பலால் இளைஞர் கொலை செய்யப்பட்டு உடல் கிராமத்துக்கு செல்லும் பாதையில் வீசப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாடா கிராமத்துக்கு எளிதாக செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக இன்று காலை பொதுமக்கள் திருவாலங்காடு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ''திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் லோகேஷ், மர்ம கும்பலால் தலை, கை, கால் உட்பட உடல் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட சரிமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு, உடல் நார்த்தவாடா கிராமத்துக்கு செல்லும் பாதையில் வீசி சென்றது'' தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் எஸ்.பி.சீனிவாச பெருமாள், திருத்தணி டிஎஸ்பி கந்தன் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவ்விசாரணையில், லோகேஷ் நார்த்தவாடாவில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்து தங்கியிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து, போலீஸார் லோகேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன் பூண்டி பகுதியில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்த லோகேஷை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டும் காட்சிகளும், அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றும் காட்சிகளும் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

x