தருமபுரி அருகே ஆசிரியை வீட்டில் 100 பவுன் திருட்டு: நெல்லையைச் சேர்ந்த 3 பேர் கைது


தருமபுரி: அதியமான்கோட்டை அருகே ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை திருடியவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை அடுத்த புறவடைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேர்லின் பெல்மா (44). கோவிலூரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மணமாகவில்லை. ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான தாயார் மேரியுடன் புறவடையில் வசித்து வருகிறார். மேரி மருத்துவ சிகிச்சைக்காக வேலூருக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு ஷேர்லின் பெல்மா பணிக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே பார்த்தபோது ஷேர்லின் பெல்மாவின் 70 பவுன் நகை, அவரது தாயார் மேரியின் 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

இது தொடர்பாக பெல்மா அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை யில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுரேஷ் (34), துர்காநம்பி (25), கார்த்தி (25) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே, அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை மீட்டுள்ளனர். மேலும், இந்த திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

x