சிதம்பரம் அருகே காவலரைத் தாக்கிய திருடனை ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுஉள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது வீட்டில் 10 பவுன் தங்க நகை உள்ளிட்டவை கடந்த 18-ம் தேதி திருடு போயின.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த திருட்டில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் வட்டம், நெல்லியார்கோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் (38) என்பவரை நேற்று முன்தினம் அண்ணாமலை நகர் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. காவலர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, திருட பயன்படுத்தப்பட்ட பொருட்களை சித்தலபாடி கிராம சாலையில் உள்ள பனைமரம் அருகே மறைத்து வைத்திருப்பதாக ஸ்டீபன் தெரிவித்துள்ளார். அவற்றை எடுப்பதற்காக காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில், காவலர் ஞானசேகரன் உள்ளிட்டோர் ஸ்டீபனுடன் நேற்று காலை 6 மணிக்கு அந்த இடத்துக்கு சென்று, அங்கிருந்த இரும்பு ராடு, கத்தி, ஸ்குரூ டிரைவர் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றினர்.
அப்போது, திடீரென காவலர் ஞானசேகரனை தாக்கிய ஸ்டீபன், காவல் ஆய்வாளர் அம்பேத்கரை கத்தியால் வெட்டி, தப்பியோட முயன்றார். இதையடுத்து, ஆய்வாளர் துப்பாக்கியால் ஸ்டீபனின் காலில் சுட்டுள்ளார். இதில் காயமடைந்து கீழே விழுந்த ஸ்டீபன் மற்றும் காயமடைந்த காவலர் ஞானசேகரன் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் ஞானபிரகாசத்துக்கு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஸ்டீபன் மீது கன்னியாகுமரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்