சிவகங்கை: ஒரு வயது பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சேதம்பால் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணாத்தாள் (40). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து சேதம்பாலில் தாயார் வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவருக்கும், அவரது மாமன் மகன் கார்த்திக் ராஜாவுக்கும் (48) இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பெண் குழந்தை தனது பிடிக்காது என்று கூறி கண்ணாத்தாளுடன் பேசுவதை கார்த்திக் ராஜா தவிர்த்து வந்தார். கார்த்திக் ராஜாவை பிரிய விரும்பாத கண்ணாத்தாள் தனது ஒரு வயது பெண் குழந்தையை கடந்த 2014 அக்.3-ம் தேதி இரவு சானாரேந்தலில் குடிநீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீஸார் வழக்கு பதிந்து கண்ணத்தாள், கார்த்திக் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட கண்ணாத்தாள், கார்த்திக்ராஜா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.