பேக்கரி பன்னில் ‘பல்’ இருந்ததால் அதிர்ச்சி: திருப்பூரில் அதிகாரிகள் ஆய்வு


திருப்பூரில் பேக்கரியில் வாங்கி பன்னில்  ‘பல்’ இருந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பூர்: பேக்கரியில் பெண் வாங்கிய பன்னில் ‘பல்’ இருந்ததால் அதிர்ச்சி அடைந்தவர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்ததை தொடர்ந்து ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.

திருப்பூர் காங்கயம் சாலை பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இந்த பேக்கரியில் கடந்த 18-ம் தேதி பெண் வாடிக்கையாளர் ஒருவர், தனது குழந்தைகளுக்கு பன் வாங்கி சாப்பிட கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது பன்னுக்குள் ‘பல்’ ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பேக்கரி உரிமையாளரிடம் முறையிட்ட போது உரிய பதில்லை.

தொடர்ந்து பேக்கரின் பின்பக்கம் பேக்கரிக்கு தேவையான உணவுகளை தயாரிக்கும் இடத்துக்கு நேராக சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அலைபேசியில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரிக்கப்படது.

உணவு பாதுகாப்பு அலுவலர் ஆறுச்சாமி கூறும்போது, “சம்பந்தப்பட்ட பேக்கரியில் உடனடியாக ஆய்வு செய்தோம். அங்கு உற்பத்திக்கூடத்தில் சுகாதாரக்கேடு இருப்பது கண்டறியப்பட்டு, தற்காலிகமாக பேக்கரி உற்பத்திக்கூடத்தை மூடியுள்ளோம். சுகாதாரக்கேடு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம். தொடர்ந்து அங்கு மீண்டும் ஆய்வுக்கு பின்னரே பேக்கரி உற்பத்திக்கூடத்துக்கு அனுமதி தரப்படும்” என்று அவர் கூறினார்.

x