கோவை: திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை விவகாரத்தில், கோவை உதவி ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய, ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி(60), திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். நிலப்பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய , தேடப்பட்டு வந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
முக்கிய குற்றவாளியான முகமது தவுபிக்கை, போலீஸார் சுட்டுப் பிடித்தனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் குறித்து ஜாகிர் உசேன் பிஜிலி புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் பணியில் அலட்சியமாக இருந்த திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் நேற்று (மார்ச்.19) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அச்சமயத்தில், திருநெல்வேலி டவுன் சரக உதவி ஆணையராக பணியாற்றிய வரும், தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆணையருமான செந்தில்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக, பணியில் அலட்சியமாக இருந்ததாக, உதவி ஆணையர் செந்தில்குமாரை இன்று (மார்ச்.20) பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறும்போது, “சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பணியிடத்தை கூடுதலாக கவனிப்பார்” என்றார்.