சிவகங்கை: காளையார்கோவில் அருகே மனைவியை எரித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனையும், மாமியார், நாத்தனாருக்கு 2 ஆண்டுகள் சிறையும் விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கீழவளையம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் செல்வகுமார் (31). இவருக்கும் தேவகோட்டையைச் சேர்ந்த போலீஸ் சார்பு-ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மகள் ஸ்ரீவித்யாவுக்கும் (27) இடையே கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
செல்வகுமார் வீடுகட்ட ரூ.10 லட்சம் கேட்டு, ஸ்ரீவித்யாவிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். கடந்த 2017 டிச.8-ம் தேதி ஏற்பட்ட சண்டையில் ஸ்ரீவித்யா அணிந்திருந்த உடையில் செல்வக்குமார் தீ வைத்தார். பலத்த காயமடைந்த ஸ்ரீவித்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்து செல்வகுமார், அவரது தந்தை வேலுச்சாமி (58), தாயார் வள்ளி (52), சகோதரி கோகிலா (30), உறவினர் சுதா (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை காலத்திலேயே வேலுச்சாமி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.21,000 அபராதம் விதித்தார்.
மேலும், தாயார் வள்ளிக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம், சகோதரி கோகிலாவுக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், சுதாவை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததற்காக ஸ்ரீவித்யாவின் தந்தை பாலகிருஷ்ணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். பாலகிருஷ்ணன் தற்போது திருப்பத்தூர் நகர் சார்பு-ஆய்வாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.