பாஜக நிர்வாகி காருக்குள் மர்ம மரணம்: மதுரை காவல் துறை விசாரணை


மதுரை: மதுரையில் பாஜக நிர்வாகி திடீரென உயிரிழந்தார். அவரது உடல் கார் இருக்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன்நகரைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி (40). இவர், மதுரை நகர் பாஜக செல்லூர் மண்டல் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளராக இருந்தார். ஆட்டோ ஓட்டுநரான இவர், கட்சியிலும் தீவிரமாக பணியாற்றினார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 மாதமாக ஆட்டோ ஓட்டுவதை தவிர்த்து, வாடகை டாக்ஸ் ஓட்டினார். வழக்கம் போல் 2 நாளுக்கு முன்பு காருடன் வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்காவது வெளியூர் சவாரி போயிருக்கலாம் என, அவரது குடும்பத்தினர் கருதினர்.

இந்நிலையில், கூடல்புதூர் பகுதியில் தனது கார் இருக்கையில் கருப்புச்சாமி மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த கூடல்புதூர் போலீஸார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது உடலில் வெளிக்காயங்கள் எதுவுமில்லை. ஒருவேளை தொழில்போட்டி காரணமாக மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா அல்லது வேறு சில காரணத்துக்கென அவரே விஷம் குடித்து தற்கொலை செய்தாரா என்ற பல்வேறு சந்தேக கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் கூடல்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்தும் விசாரிக்கின்றனர். இதற்கிடையில் மாநகர பாஜக தலைவர் மாரி சக்ரவர்த்தி உள்ளிட்ட பாஜகவினர் கருப்பச்சாமி இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவேண்டும் என, காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x