குமரி: தக்கலையில் வீட்டிலிருந்து வெளியேறி மாயமான 2 சிறுமிகளில், ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். சிறுமிகளுடன் இன்ஸ்டா கிராமில் பழகி வர வைத்த திருநெல்வேலியை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகளும் கடந்த 12ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறி மாயமானார்கள். அவர்களது தாயார் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீஸார் மற்றும் தனிப்படையினர் சிறுமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு நெல்லையில் இருந்து 2 சிறுமிகளும் தக்கலை பேருந்து நிலையத்துக்கு வந்த போது அவர்களை போலீஸார் மீட்டனர். அவர்களிடம் மார்த்தாண்டம் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள் தக்கலை பேருந்து நிலையத்துக்கு வந்த போது, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழி்ல் செய்யும் தக்கலையை சேர்ந்த அஜித்குமார் என்பவர் சிறுமிகளிடம் பேச்சுக் கொடுத்து தனது அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்ததை தொடர்ந்து அஜித்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்ஸ்டா கிராமில் தங்களுடன் பழகிய இளைஞர் அழைத்ததால் சிறுமிகள் இருவரும் திருநெல்வேலிக்கு சென்றதும், அந்த இளைஞர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த மேளஇசை கலைஞர் மோகன் (24) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. திருநெல்வேலிக்கு சிறுமிகள் வந்ததும் மோகன் அவர்களை அழைத்துச் சென்று 2 நாட்கள் பல்வேறு இடங்களை சுற்றிக் காண்பித்துள்ளார். போலீஸார் தேடுவதை அறிந்ததும் அவர் சிறுமிகளை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். இதை தொடர்ந்து மோகனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே வழக்கறிஞர் அஜித்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மநாபபுரத்தில் வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.