ராமநாதபுரம்: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்நேசன் (29). இவர் 14 வயதுடைய சிறுமியை 2017 முதல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் கர்ப்பம் அடைந்த அச்சிறுமிக்கு 2019-ல் குழந்தை பிறந்தது. அதனையடுத்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி அன்று சிறுமி ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அருள்நேசன் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அச்சிறுமியையும், அவருக்கு பிறந்த குழந்தையையும் சென்னையில் ஒரு காப்பகத்தில் மகளிர் போலீஸார் சேர்த்தனர்.
இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி கே.கவிதா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அருள்நேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆர்.எம். கீதா ஆஜரானார்.