மனைவியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை - மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு


மனைவியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(30). இவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகேயுள்ள திருப்புங்கூர் பிரதான சாலையைச் சேர்ந்த தேவி(28) என்பவருக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2017ம் ஆண்டு மனைவி தேவியை திருப்புங்கூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் சரவணன் விட்டுச்சென்றார்.

இந்நிலையில், 2017ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி திருப்புங்கூரில் உள்ள வீட்டின் பின்புறம் தேவி சந்தேகத்துக்குரிய முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக, தேவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தேவியின் வீட்டுக்கு சரவணன் வந்து பிரச்சினை செய்து, அவரை தாக்கியதில் தேவி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணனை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.

x