ஜன்னல் கம்பியை அறுத்து அருப்புக்கோட்டை வங்கியில் திருட்டு முயற்சி!


அருப்புக்கோட்டையில் ஜன்னல் கம்பிகளை அறுத்து தமிழ்நாடு கிராம வங்கிக் கிளையில் நேற்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்தது. எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் தமிழ்நாடு கிராம வங்கிக் கிளை இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை இந்த வங்கியின் பக்கவாட்டில் உள்ள சந்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், ஜன்னலில் 3 கம்பிகளை மட்டும் அறுத்து அதன் வழியாக வங்கிக்குள் நுழைந்தனர். பின்னர் கண்காணிப்பு கேமரா வயர்களை துண்டிக்க முயன்றபோது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் கொள்ளை முயற்சியைக் கைவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

இதனால், வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் தப்பின. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வங்கி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். வங்கி மேலாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி தடயங்களைச் சேகரித்தனர்.

இந்தச் சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து வங்கி மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக்கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வங்கியில் ஏற்கெனவே இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x