விருதுநகர்: நகை பறித்து தப்பியவர் 1 மணி நேரத்தில் கைது!


ரயிலில் வந்த கல்லூரி மாணவரிடம் நகை பறித்து தப்பியவரை, ஒரு மணி நேரத்தில் நேற்று ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் (19). கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் மணப் பாறையில் உள்ள தனது மாமா வீட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் வந்தார்.

வையம்பட்டியில் ரயிலில் ஏறிய மதுரை சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த சுர்ஜித் (32) என்பவர் கிஷோருடன் சகஜமாகப் பேசி வந்துள்ளார். அப்போது, இருவரும் தங்களது செல்போன் எண்களையும் பகிர்ந்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடிக்கு ரயில் வந்தபோது, கிஷோர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, சுர்ஜித் ரயிலில் இறங்கி தப்பிச்சென்றார். விருதுநகர் வந்த கிஷோர் இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதையடுத்து, சுர்ஜித் செல்போன் எண் மூலம் அவரை போலீஸார் உடனடியாக கண்காணித்தனர். அப்போது, சென்னை செல்லும் கன்னியாகுமரி ரயிலில் அவர் தப்பிச்செல்வது தெரியவந்தது. அதையடுத்து, சுர்ஜித்தை பின்தொடர்ந்து சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், அவர் திருடிய ஒரு பவுன் தங்கச் சங்கிலியையும் போலீஸார் மீட்டனர்.

x