தருமபுரி மாவட்டம் ஏமனூர் அருகே யானையைக் கொன்று தந்தம் திருடிய சம்பவத்தில் தொடர்புடைய இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னகாரம் வட்டம் ஏரியூர் ஒன்றியம் ஏமனூர் காப்புக்காடு பகுதியில் அடர்வனத்தில் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து கடந்த 1-ம் தேதி வனத்துறையினருக்கு தெரிய வந்தது. நேரடி ஆய்வில், ஆண் யானை கொல்லப்பட்டு தந்தம் வெட்டி எடுக்கப்பட்டதுடன் யானையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை வனத்துறை சார்பில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏமனூர் அருகே காவிரியாற்றின் மறுகரையில் உள்ள கொங்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோவிந்தப்பாடி புதூரைச் சேர்ந்த செந்தில் ஆகியோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து யானையின் தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.