நெருக்கிய கடன் பிரச்சினை: விருதுநகரில் நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை


விருதுநகரில் நிதி நிறுவன உரிமையாளர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அருகே உள்ள பாவாலியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் (37). வடமலைக்குறிச்சி சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதோடு, கட்டுமானப் பொருட்கள் விற்பனை, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

தினமும் பணி முடிந்து இரவு 9 மணியளவில் வீடு திரும்பும் அருண்பாண்டியன், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் செல்லவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் நேற்று காலை அருண்பாண்டியனின் நிதி நிறுவன அலுவலகத்துக்கு வந்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் அருண்பாண்டியன் இறந்து கிடந்தார்.

இதுபற்றி ஆமத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அருண் பாண்டியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சினை காரணமாக அருண்பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x