திருநெல்வேலி: கரையிருப்பு, கணபதி மில் காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). ஆட்டோ ஓட்டுநரான இவர், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிலர் ராஜ்குமாரை தாக்கி, அவரது ஆட்டோவை அடித்து நொறுக்கினர். இது குறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 17 வயது சிறுவர்கள் 2 பேரை கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதேபோல், ஆட்டோ ஓட்டுநர் மீது அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.