கணவர் மது அருந்தி துன்புறுத்தல்: 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி


தூத்துக்குடி: தாள முத்து நகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35). எலக்ட்ரீசியனான இவருடைய மனைவி சந்திர பிரியா (31). இவர்களுக்கு ஸ்டெபி (10), ஆரோக்கிய பிரின்ஸ் (8), ஜெசிக்கா (10 மாதம்) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். ஜஸ்டின் சீலன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி சந்திர பிரியாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சந்திர பிரியா நேற்று தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் 4 பேரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாள முத்து நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x