திருப்பூர் திகில் - நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள்; மக்கள் பீதி!


திருப்பூர்: நல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காங்கயம் சாலை வி.ஜி.வி.கார்டன் கிழக்குப் பகுதி, மேபிளவர் கார்டன், ஹர்சன் கார்டன், அமிர்தா நகர், சுபத்ரா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 600- க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை மக்கள் உணர்ந்தனர்.

பல்வேறு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை மக்கள் பார்த்தனர். அதில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீடுகளை நோட்டமிட்டு செல்வதும், காம்பவுண்ட் சுவர் ஏறி குதிப்பதும், ஜன்னல்கள் திறக்க முயற்சிப்பதும், போர்டிகோவில் மறைந்திருப் பதும் என மர்ம நபர்கள் நடமாடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த னர். அதன் பேரில் விசாரித்து வீடுகளில் திருட முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருப்பினும், அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். நேற்று மாலை நல்லூர் குற்றப் பிரிவு ஆய்வாளர் விநாயகம் நேற்று பொது மக்களி டை யே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, காவலன் செயலியில் புகார் அளிப்பது, அவசர உதவி எண்ணுக்கு அழைப்பது போன்ற விழிப்புணர்வு தகவல்களை மக்களிடையே பகிர்ந்து கொண்டார். மர்ம நபர்கள் நடமாட்டம் தெரியவந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ”கண்காணிப்புக் கேமராவில் பதிவான நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். எனினும் பொது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், இரவு நேர ரோந்துப் பணியை போலீஸார் தீவிரப்படுத்த வேண்டும்” என்றனர்.

x