சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


குன்னூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாபு. இவர், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டினார். இந்நிலையில் கடந்த 2022, அக்டோபர் 17-ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் விசாரித்ததில், தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி தெரிவித்தார்.

இது குறித்து, போலீஸார் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, பாபுவை உதகை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி எம்.செந்தில்குமார் தீர்ப்பளித்தார். அதில், பாபுவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.16,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜரானார். இதையடுத்து பாபு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

x