தாயை இழிவாக பேசியதால் உருட்டு கட்டையால் அடித்து இளைஞர், திருப்போரூரில் கொலை செய்யப்பட்டுள்ளார்
திருப்போரூரை அடுத்துள்ள மேலையூர் கிராமத்தில் சென்னை அடையாறு, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரின் சகோதரருக்கு சொந்தமான மனை உள்ளது. இந்த மனை இருக்கும் பகுதியை பூபதியும், அவரது நண்பர்களும் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு சுத்தம் செய்து விட்டு செல்வர். அதன்படி கடந்த 13-ம் தேதி பூபதி, பாஸ்கர், விஷ்ணு ஆகியோர் சுத்தம் செய்து மனையை சுற்றிலும் கற்கள் சாய்ந்து கிடந்ததை சரி செய்து நட்டுள்ளனர். பின்னர் அவற்றுக்கு வண்ணம் பூசி விட்டனர். அப்போது மாலை 6 மணிக்கு மேல் ஆகி விட்டதால் அந்த பகுதியில் இருந்த ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான கலையரங்கத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இரவு 9 மணி அளவில் மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்குமார் (24) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அவ்வழியே சென்றுள்ளார். அவரை கூப்பிட்டு நிறுத்திய பாஸ்கர் அவரிடம் பேசியுள்ளார். அவரும் மதுபோதையில் இருந்ததால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்குமாரின் தாய் குறித்து சில தவறான வார்த்தைகளை பாஸ்கர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மற்ற இருவரும் சமாதானம் கூறி சரண்குமாரை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இரவு 11.30 மணியளவில் அந்த பகுதிக்கு திரும்பி வந்த சரண்குமார் அங்கு மது அருந்திய நபர்கள் மூவரும் போதையில் அங்கேயே படுத்து தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்துள்ளார். தனது தாயை திட்டிய பாஸ்கரை அருகில் இருந்த மரக்கட்டைகளை கொண்டு தாக்கி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில் 14-ம் தேதி காலை ரத்த வெள்ளத்தில் கிடந்த பாஸ்கரை மற்றவர்கள் பார்த்து ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தன. இதையடுத்து வீட்டில் இருந்த சரண்குமாரை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை அடையாறு காந்தி நகரைச் சேர்ந்த பாஸ்கர் (35) நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் சரண்குமார் (24) என்பவரை போலீஸார் கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.