அரியலூர்: அரியலூர் மாவட்டம் வெங்கனூரை அடுத்த கொரத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45).விவசாயி. இவரது வீட்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் ரமேஷ்(40) டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மனோகரன் மனைவிக்கும், ரமேஷூக்கும் கூடா நட்பு இருந்து வந்துள்ளது. இதை மனோகரன் கண்டித்தும் கூடா நட்பு தொடர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் கடந்தாண்டு மார்ச் 15-ம் தேதி தனது வீட்டுக்கு வந்த ரமேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
இதையடுத்து வெங்கனூர் போலீஸார் மனோகரனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் முதன்மை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா, மனோகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.