ஆரணி அருகே சேவூர் ஊராட்சி அலுவலக கண்ணாடிகள் சூறை - ஓட்டுநர் கைது


திருவண்ணாமலை: ஆரணி அருகே சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கத்தியால் அடித்து நொறுக்கிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் வசிப்பவர் லாரி ஓட்டுநர் மணிகண்டன்(35). இவர், வசிக்கும் வீதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக, இவரது வீட்டின் முன்பு உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற, ஒப்பந்ததாரர் கூறியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேவூர் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற மணிகண்டன், பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் புருஷோத்தமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், கையில் இருந்த கத்தியால், ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள், தளவாட பொருட்கள் மற்றும் தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார். இவரது அடாவடியால் அதிர்ந்து போன புருஷோத்தமன், அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பாதுகாப்பாக மூடி வைத்துவிட்டு தப்பியோடி விட்டார். இதையறிந்த ஆரணி கிராமிய காவல்துறையினர், சேவூர் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று கத்தியுடன், நிதானம் இழந்த நிலையில் சுற்றி வந்த மணிகண்டனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

x