கோவையில் அதிர்ச்சி: தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை


கோவை: தீவிரவாத தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸார் தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட வ.உ.சி பூங்கா பகுதியில் நேற்று நள்ளிரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் வ.உ.சி மைதானம் பின்புறமுள்ள ஒரு இடத்தில் இருந்த மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து ரோந்து போலீஸார், ரேஸ் கோர்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரேஸ் கோர்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் கோவை அடுத்த கோவைப் புதுரை சேர்ந்த சொக்கலிங்கம் (54) என்பது தெரியவந்தது. இவர் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

மகள்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கோவைப்புதூரில் உள்ள வீட்டில் மனைவியுடன் சொக்கலிங்கம் வசித்து வந்தார். கடந்த 1997ம் ஆண்டு இவர் 2ம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் காரமடையில் உள்ள நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

வ.உ.சி மைதானத்துக்கு பின்புறம் உள்ள இடத்துக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து தெரிய வந்தது. குடும்ப சூழலில் எந்த அழுத்தமும் இல்லை, பணியில் எந்த அழுத்தமும் இல்லை எனத் தெரிவித்த காவல்துறையினர், இவர் தற்கொலைக்கு என்ன காரணம் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x