திருவள்ளூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் கோட்டாட்சியர் மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் ஏ.அருணாசலம்(70). இவர் தமிழக அரசில் கடந்த 1980-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, அருணாசலம் பல்வேறு பதவி உயர்வுகள் பெற்று, பல்வேறு பிரிவுகளில் பல இடங்களில் பணிபுரிந்து வந்தார். தொடர்ந்து, அவர் 2007-ம் பிப்ரவரி 9-ம் தேதி கோட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று, திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியராக கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி வரை பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், அரசு ஊழியராக இருந்து கொண்டு அருணாசலம் தன் பெயரிலும், தன் மனைவி லலிதா பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக, கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், 2007-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி வரையில் ரூ.69 லட்சம் அளவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளது திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரின் சோதனை மற்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த விசாரணையின் அடிப்படையில், திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் அருணாசலம் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா வாதிட்டார். இந்நிலையில், சமீபத்தில் முடிவுக்கு வந்த இந்த வழக்கு விசாரணையில், அருணாசலம், லலிதா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து, திங்கள்கிழமை திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், அரசு பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை சேர்த்த முன்னாள் கோட்டாட்சியர் அருணாசலத்துக்கும், அவரது மனைவி லலிதாவுக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அருணாசலத்துக்கு ரூ.35 லட்சம், லலிதாவுக்கு ரூ.5 லட்சம் என, அபராதமும் விதித்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி. .