மதுரை: விரகனூர் பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மதுரை விரகனூர் சந்திப்பு பகுதியில் ராமேசுவரம் - மதுரை , நெல்லை, கன்னியாகுமரி சாலைகள் சந்திப்பு உள்ளது. இது எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருக்கிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 4.10 மணிக்கு பரமக்குடியில் இருந்து மதுரைக்கு பயணிகளுடன் அதிவேகமாக செந்தாமரை என்ற தனியார் பேருந்து வந்தது. அப்போது விரகனூர் ரவுண்டானா அருகே சாலையோரத்தில் டீக்கடை முன்பு நிறுத்தி இருந்த லாரி மீது அந்த தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. பேருந்து மோதிய வேகத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. இருப்பினும், பேருந்து கதவுகளும் லாக் ஆனதால் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
அப்பகுதியினர் தீயணைப்பு துறையினர் உதவியால் பேருந்து கதவு, சைடு பகுதியை உடைத்து பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் முன்பகுதியில் அமர்ந்து பயணித்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகிலுள்ள இடைக்காட்டூர் பெர்க்மான்ஸ் என்பவரின் மனைவி செல்வி (52) உயிரிழந்தார். மேலும்,பேருந்தில் பயணித்த 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்தை ஓட்டுனர் அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர். விபத்து குறித்து போலீஸார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்