திருச்சி: திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர், தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி பெல் கணேசபுரம் 8-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (50). இவர் பெல் நிறுவனத்தில் இணைப்பில்லா குழாய் வடிவமைப்பு (எஸ்எஸ்டிபி) பிரிவில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பார்வதி இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களது ஒரே மகள் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை பணிக்குச் சென்ற சண்முகம் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி பார்வதி, கணவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதுகுறித்து அவர் பெல் நிறுவன உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பெல் நிறுவன பாதுகாப்பு அலுவலர்கள் நள்ளிரவு 1.30 மணிக்கு அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சண்முகம் துப்பாக்கியால் நெற்றியில் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த பெல் போலீஸார் அங்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவரது மனைவியிடம் போலீஸார் விசாரித்தபோது, சண்முகத்துக்கு இதயநோய் பிரச்சினை இருப்பதும், அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
மேலும், அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை என்பதும், அவர் ஏற்கெனவே டெல்லியில் பணியாற்றியபோது இத்துப்பாக்கியை வாங்கி இருக்கலாம் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.