திருச்சி: திருச்சி அரியமங்கலம் பெரியார் தெரு அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பொன்ராஜ்(64). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். பொன்ராஜ் மார்ச் 10-ம் தேதி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, இரவு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில், கைலாஷ் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் உடலில் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த பொன்ராஜ் பார்த்த அப்பகுதி மக்கள், அவர் சாலை விபத்தில் காயமடைந்துள்ளார் எனக் கருதி, பொன்ராஜை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அன்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், பொன்ராஜ் மகனும், திமுக 37-வது வார்டு இளைஞரணி அமைப்பாளருமான சுந்தர்ராஜ், ‘பொன்ராஜ் உடலில் இருந்த காயங்கள் சாலை விபத்தால் ஏற்பட்ட காயங்கள்போல தெரியவில்லை. அவரை யாரோ அடித்து கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என திருவெறும்பூர் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். அப்பகுதி சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, பொன்ராஜை சிலர் தாக்குவது பதிவாகி இருந்தது.
தொடர் விசாரணையில், 2 ஆண்டுக்கு முன்பு பொன்ராஜின் மருமகளுடன் அரியமங்கலம் முத்துநகரைச் சேர்ந்த பா.நிஷாந்த்(27) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதை பொன்ராஜ் கண்டித்துள்ளார். அதனால், நிஷாந்த் மற்றும் அவரது நண்பர்கள் பொன்ராஜை தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து, நிஷாந்த் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக ஸ்ரீரங்கம் அடையவளைஞ்சான் வீதியைச் சேர்ந்த ம.பிரசன்னா(20), ஸ்ரீரங்கம் வடக்குவாசலைச் சேர்ந்த ர.குணசேகர்(21) ஆகிய 2 பேரும் திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். இதையடுத்து, பொன்ராஜ் கொலை செய்யப்பட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகே பொன்ராஜ் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று பொன்ராஜ் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.