திருச்சியில் பள்ளி மாணவரை பிரம்பால் அடித்த தாளாளர் மீது காவல் ஆணையரிடம் புகார்


திருச்சி: திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள திருஇருதய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொன்மலைப்பட்டி, மேலகல்கண்டார் கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் புதிதாக பொறுப்பேற்ற தாளாளர் ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர், பள்ளி மாணவர்களை பிரம்பு கொண்டு அடித்ததாக ஒரு மாணவரின் தந்தை பொன்மலை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவரை விசாரணைக்கு என்று பொன்மலை போலீஸார் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றதற்கு, இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய மாணவர் சங்க செயலாளர் மோகன், திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் நேற்று அளித்த மனுவில், "திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளியின் தாளாளர் ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் பிரம்பால் தாக்கி, திட்டியுள்ளார். மாணவர்களை பள்ளியின் கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்தி வருகிறார். மாணவர்களை தாளாளர் அடிக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், பொன்மலை போலீஸார், தாளாளரால் தாக்கப்பட்ட மாணவரை நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டுக்கு வந்து பெற்றோரின் அனுமதி இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அமர வைத்துள்ளனர்.

எனவே, பள்ளி மாணவரை தாக்கிய தாளாளர் ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர், மாணவரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளர் வினோத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

x