ஓசூர்: கெலமங்கலத்தில் உள்ள தனியார் கேட்டரிங் சென்டரில் சாப்பிட்ட 5 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து, நடந்த ஆய்வில் உரிமம் இல்லாமல் செயல்பட்டது தெரிந்து, நோட்டீஸ் வழங்கி உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தனியார் கேட்டரிங் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதோடு, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், ஆர்டரின்பேரிலும் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 5 பேர் நேற்று முன்தினம் கேட்டரிங் சென்டரில் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 5 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் அவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இத்தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸா் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஓசூர் ஒன்றிய அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு கேட்டரிங் சென்டரில் ஆய்வு செய்தனர். மேலும், அங்கிருந்த குடிநீர் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கேட்டரிங் சென்டர் நடத்த உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து, கேட்டரிங் சென்டர் நடத்தியவருக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்தனர். மேலும், உணவு மாதிரி ஆய்வு அறிக்கைக்குப் பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.