ஓசூர்: ஓசூர் அருகே உடல் காயங்களுடன் பாதி எரிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு முதியவர்களின் உடலை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர் அருகே ஒன்னல்வாடியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (70). இவரது மனைவி தெரசா இவர்களது மகள்கள் விக்டோரியா மற்றும் சகாய ராணி. உடல் நலக்குறைவு காரணமாக தெரசா சென்னையில் மகள்களுடன் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒன்னல்வாடியில் தனியாக இருக்கும் லூர்துசாமிக்கு, தெரசாவின் தங்கை எலிசபெத் (65) சமையல் செய்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை லூர்துசாமி வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, லூர்துசாமி மற்றும் எலிசபெத் ஆகியோர் பாதி எரிந்த நிலையில், உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இதையறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையிலான போலீஸார், இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.